கூடலூர் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் உணவு சாப்பிடாமல் திடீர் போராட்டம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை


கூடலூர் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் உணவு சாப்பிடாமல் திடீர் போராட்டம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 14 Oct 2020 6:15 PM IST (Updated: 14 Oct 2020 7:27 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் உணவு சாப்பிடாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,200-ஐ கடந்து விட்டது. கூடலூரில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் செம்பாலா முஸ்லிம் அனாதை இல்ல மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 20 மற்றும் முஸ்லிம் அனாதை இல்ல மேல்நிலைப்பள்ளியில் சுமார் 50 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் மருத்துவ சிகிச்சையும், உணவு பாதுகாப்பு துறை மூலம் 3 வேளை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. காலை உணவு 9.30 மணிக்கும், மதிய உணவு இரண்டு மணிக்கும், இரவு உணவு 9 மணிக்கும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் முஸ்லிம் அனாதை இல்ல மேல்நிலைப்பள்ளியில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நேற்று காலை 9 மணிக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகக் கூறி நோயாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிகிச்சை மையத்தை விட்டு வெளியே வந்து வளாகத்தில் நின்றிருந்தனர். மேலும் காலை உணவை நோயாளிகள் யாரும் சாப்பிடாமல் புறக்கணித்தனர்.

இது குறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொரோனா நோயாளிகள் சரமாரியாக பல்வேறு புகார்களை தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள் உரிய நேரத்தில் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காலை 10 மணிக்கு நோயாளிகள் தங்களது இருப்பிடங்களுக்கு சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் கூறும்போது, நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்குவதில்லை.இதில் பலர் சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆளானவர்கள். உரிய நேரத்தில் சாப்பிடாததால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சாப்பாடும் போதிய அளவு வழங்குவதில்லை. அவ்வாறு வழங்கும் உணவு தரமற்றதாக உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story