கோபி பகுதியில், பயிர்களை பாதுகாக்க இயற்கை மூலிகை கரைசலை டிரோன் மூலம் தெளிக்கும் விவசாயிகள்


கோபி பகுதியில், பயிர்களை பாதுகாக்க இயற்கை மூலிகை கரைசலை டிரோன் மூலம் தெளிக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 15 Oct 2020 5:38 AM IST (Updated: 15 Oct 2020 5:38 AM IST)
t-max-icont-min-icon

கோபி பகுதியில் பயிர்களை பாதுகாக்க இயற்கை மூலிகை கரைசலை டிரோன் மூலம் விவசாயிகள் தெளித்து வருகிறார்கள்.

டி.என்.பாளையம்,

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அனைத்து பாசன வாய்க்கால்களுக்கும் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு நெல் நடவுப்பணிகள் முடிவுற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து களையெடுக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் நெல்பயிர்களை தாக்கும் பூச்சிகள், மயில்கள், எலிகளிடம் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க புது முயற்சியாக டிரோன் மூலம் இயற்கை ஊட்டசத்துகளான பஞ்சகவ்யம், பழச்சாறு மற்றும் மூலிகைகள் அடங்கிய கரைசலை நெற்பயிர்கள் மீது விவசாயிகள் தெளித்து வருகின்றனர்.

பயிர்களை பாதுகாக்க...

இதுகுறித்து இயற்கை ஊட்டச்சத்து தயாரிக்கும் நிறுவனத்தினர் கூறும்போது, ‘இயற்கை மூலிகை கரைசலை பயிர்கள் மீது தெளிப்பது நல்ல வளர்ச்சிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கவும் உதவுகிறது. இதனால் பயிர்களை எந்த பூச்சிகள் தாக்குவதையும் தடுக்கமுடியும். மேலும் இதன் மூலம் பூஞ்சான் நோய் கட்டுப்படுத்தப்படும். நிலத்தின் சத்துக்கள் அதிகரிக்கும். இந்த கரைசலை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லிட்டர் வீதம் 8 லிட்டர் தண்ணீரில் கலந்து டிரோன் மூலம் தெளிக்கும் போது எந்த வித நோய் தாக்குதலும் ஏற்படாது.

மயில், முயல், எலி, கிளி ஆகியவை பயிர்களை சேதப்படுத்தாது. தற்போது கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் 200 ஏக்கருக்கும் மேல் டிரோன் மூலம் இந்த இயற்கை ஊட்டச்சத்து கரைசல் தெளிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தினமும் ஆர்வமுடன் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். வேளாண்மையில் புதுப்புது மாற்றங்களை சந்தித்து வரும் விவசாயிகள் எதைப்பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு நஞ்சில்லா உணவு வழங்கமுடியும் என்பதை மனதில் கொண்டு புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். தற்போது பெரும்பாலான விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறிவரும் நிலையில் டிரோன் மூலம் பயிர்களுக்கு இயற்கை ஊட்டச்சத்து அளிப்பதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

Next Story