‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை விரைந்து முடித்து பிப்ரவரி மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவு


‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை விரைந்து முடித்து பிப்ரவரி மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவு
x
தினத்தந்தி 15 Oct 2020 9:37 AM IST (Updated: 15 Oct 2020 9:37 AM IST)
t-max-icont-min-icon

‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை விரைந்து முடித்து பிப்ரவரி மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.1,029 கோடியே 96 லட்சம் மதிப்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு ரூ.500 கோடி மானியமும், மாநில அரசு ரூ.500 கோடி மானியமும் வழங்குகிறது. மொத்தம் 26 பணிகள் நடைபெற உள்ளது. அவற்றில் 24 பணிகள் செயல்பாட்டில் உள்ளது. பூங்கா அமைக்கும் பணிகள் மட்டும் முடிந்துள்ளது. ஒரு பணிக்கு ஒப்பந்தப்புள்ளி சீராய்வு நிலையில் உள்ளது.

அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டப்பணிகள் ரூ.250 கோடிக்கு நடைபெறுகிறது. இதில் 26 மேல்நிலைத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. 57 கிலோ மீட்டர் தூரத்திற்கு பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. 14 கீழ்நிலை தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் வீட்டு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்படுகிறது. தற்போது வரை 33 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்து விரைவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

அம்ருத் திட்டம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120 கோடியே 57 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. 1 நீரேற்று நிலையம், 1 நீர் சுத்திகரிப்பு நிலையம், 29 மேல்நிலை தொட்டிகள் கொண்ட இந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

டவுன்ஹாலில் ரூ.59 கோடியே 44 லட்சத்தில் மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள், பழைய பஸ் நிலையத்தில் ரூ.38 கோடியே 14 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள், புதிய பஸ் நிலையத்தில் ரூ.31 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள், பழைய பஸ் நிலையத்தில் ரூ.20 கோடியே 82 லட்சம் மதிப்பில் பல அடுக்கு வாகன நிறுத்த பணிகள், தினசரி மார்க்கெட், வாரச்சந்தை மேம்படுத்துதல், பூ மார்க்கெட் மேம்படுத்துதல், மீன் மார்க்கெட் மேம்படுத்துதல், நுண் உரம் செயலாக்கம், எல்.இ.டி. தெருவிளக்குகள் பொருத்துதல், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைத்தல், நொய்யல் ஆறு மேம்பாடு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் அமைத்தல் ஆகிய பணிகள் குறித்தும் ஆய்வு நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகளில் விரைவில் முடிக்கக்கூடிய பணிகளை வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு ஏற்ப அதிகாரிகள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். திட்ட பணிகளுக்கு மின் வாரியத்துடன் பணம் செலுத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பேசி முடிவு செய்யப்படும். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகள் தாமதம் இல்லாமல் செய்யும் வகையில் கலெக்டரின் ஆலோசனையின் பேரில் விரைந்து முடிக்க வேண்டும். முடிந்த வரை சாலை பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் உள்ள பகுதி தவிர மற்ற பகுதிகளில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், மாநகர பொறியாளர் ரவி, தொழில்துறையினர், தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story