இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவி தர்ணா - அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவி தர்ணா - அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Oct 2020 10:23 AM IST (Updated: 15 Oct 2020 10:23 AM IST)
t-max-icont-min-icon

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவி காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் முக்குளம் ஊராட்சியில் 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இறந்தவர்களுக்கு வீடு வழங்கப்பட்டதாக கணக்கு எழுதி முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவி காஞ்சனா கண்ணபெருமாள் மாவட்ட கலெக்டர் மலர்விழியிடம் புகார் மனு கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் முக்குளம் ஊராட்சிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து ஊராட்சி செயலாளர் சரவணனை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். இந்த முறைகேடு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர் உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிக்கு புதிய செயலாளரை நியமிக்க வேண்டும். ஊராட்சி மன்ற அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஊராட்சி மன்ற தலைவி காஞ்சனா கண்ணபெருமாள் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவி தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story