ராசிபுரம் அருகே சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் 2 பேர் கைது


ராசிபுரம் அருகே சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2020 10:28 AM IST (Updated: 15 Oct 2020 10:28 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் இந்த சிறுமியின் 12 வயது தங்கை ஆகிய இருவரும் தந்தை இறந்துவிட்டதால் அவர்களது தாயுடன் வசித்து வந்தனர். இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக அக்காள்- தங்கையான இரு சிறுமிகளையும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியா நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது 2 சிறுமிகளையும் கடந்த 6 மாதங்களாக அந்த பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அணைப்பாளையம் கள்ளுக்கடை மேட்டை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சிவா என்கிற சங்கர் (வயது 26), அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகளான சண்முகம் (45), ஊமையன் என்கிற முத்துசாமி (75), வெல்டிங் பட்டறை தொழிலாளி மணிகண்டன் (30), தனியார் டயர் தயாரிப்பு நிறுவன ஊழியர் செந்தமிழ்செல்வம் (31), வரதராஜ் (55) உள்பட 7 பேரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக 5 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது அணைப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (70) என்ற முதியவர் மற்றும் 16 வயது பிளஸ்-2 மாணவன் ஆகிய 2 பேரை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள இன்னும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story