தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு வருகிறதா? கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்றும், கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? எனவும் தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
அறந்தாங்கி நகரம் காரைக்குடி நெடுஞ்சாலையில் சோதனைச்சாவடி உள்ளது. இதன் அருகில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாவார்கள். சட்டவிரோத செயல்கள் நடைபெறவும் அதிகமான வாய்ப்பு உள்ளது.
எனவே அறந்தாங்கி-காரைக்குடி நெடுஞ்சாலையில் சோதனைச்சாவடி அருகே டாஸ்மாக் கடை திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் “கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது ஆளுங்கட்சி தேர்தல் வாக்குறுதியாக, தமிழகத்தில் 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கூறப்பட்டது. அதன்படி டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறதா? தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மேலும், தமிழகம் முழுவதும் கடந்த 2016-ம் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன?
2017, 2018, 2019-ம் ஆண்டுகளில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன? அதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்பது குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை பொறுத்த வரை அறந்தாங்கியில் காரைக்குடி நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story