மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு கணிசமாக குறைந்து தற்போது 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்காரணமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 474 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 5 ஆயிரத்து 777 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதன்பயனாக 5 ஆயிரத்து 467 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 186 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் நல்ல உடல் நிலையில் உள்ளனர். அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளிடம் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் கவனிப்பு, உணவு முறை, சுத்தம் சுகாதாரம் குறித்து கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் சுயஉதவிக்குழுவினர், தன்னார்வலர்கள், உள்ளாட்சி அமைப்பினர் மூலம் வீடு வீடாக சென்று முக கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், ஆவி பிடித்தல், நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை பெற செய்தல் போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்பயனாக மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 2 மாத கணக்கீட்டின்படி எடுத்துக்கொண்டால் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது என்று கவனக்குறைவாக இருந்தால் அதிகரித்துவிடும் ஆபத்து உள்ளது. எனவே, மக்கள் போதிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெறுவது தொடர்பாக அனைத்து கட்சி மற்றும் சமுதாயத்தினர் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும். அதில் அரசின் விதிகளுக்கு உட்பட்டு விழாவை எவ்வாறு நடத்துவது என்று முடிவு செய்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story