காரைக்குடி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தாமதம் ஏன்? கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆய்வு


காரைக்குடி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தாமதம் ஏன்? கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 15 Oct 2020 10:00 AM GMT (Updated: 15 Oct 2020 9:57 AM GMT)

காரைக்குடி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் தாமதத்தால் பொதுமக்கள் அவதிப்படுவதால் பணிகளை விரைந்து முடிக்க கார்த்தி சிதம்பரம் எம்.பி., குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்தார்.

காரைக்குடி,

காரைக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.112.53 கோடி திட்ட மதிப்பீட்டில் 2017-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. இந்த பணிகள் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் பணிகள் நிறைவு பெறாத நிலையில் திட்ட மதிப்பீட்டில் மேலும் ரூ.27.6 கோடி உயர்த்தப்பட்டது. காரைக்குடி நகராட்சி பகுதியில் 152 கிலோமீட்டருக்கு பாதாள சாக்கடை அமைக்கப்பெற்று சாலைகள் அமைக்க வேண்டும் என்ற இந்த திட்டப்பணி தாமதமானதால், காரைக்குடி நகர பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிப்பட்டனர்.

இந்தநிலையில் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அழைத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடர்பான கள நிலவரங்களை உதவி நிர்வாக பொறியாளர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் விளக்கினர். மக்களின் சிரமம் கருதி பணிகளை விரைந்து முடிக்க எம்.பி. அறிவுறுத்தியதன் பேரில் தீபாவளிக்குள் பணிகளை முடித்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

மேலும் நெற்குப்பை பேரூராட்சி மேலகச்சேரி கூடத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு்ள்ள உயர் கோபுர மின்விளக்கினை கார்த்தி சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, மாவட்டந்தோறும் மக்களுக்கு சேவை செய்வதற்காக எம்.பி.களுக்கு ஒதுக்கப்படும் சுமார் 5 கோடி ரூபாய் இன்னும் 2 ஆண்டுகளுக்கு கிடையாது. மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நல்ல திட்டங்களை எங்களால் செயல்படுத்த முடியாது. எங்கள் நிதி என்பது உங்களின் வரிப்பணம். பா.ஜ.க. அரசு மக்களின் பணத்தை தர மறுக்கிறது என்றார்.

இதில் கலெக்டர் ஜெயகாந்தன், நெற்குப்பை பேரூராட்சி செயல் அலுவலர் ராமச்சந்திரன், தலைமை எழுத்தர் சேரலாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் கணேசன், தி.முக. நகரச் செயலாளர் பழனியப்பன், நகர் காங்கிரஸ் தலைவர் சிவச்சந்திரன், நகர செயலாளர் சேக்கப்பன், மாவட்ட காங்கிரஸ் இணைச்செயலாளர் சுப்பிரமணியன், வட்டார தலைவர் பன்னீர்செல்வம், குணாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story