தமிழகத்தில் 7 ஆயிரம் அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
தமிழகத்தில் 7 ஆயிரம் அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
காட்பாடி,
ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2 ஆண்டு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி காட்பாடி சன்பீம் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் சம்பத், லோகநாதன், சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு வேலூர் மாவட்டத்தில் 84 பள்ளிகளுக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 46 பள்ளிகளுக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 45 பள்ளிகளுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 பள்ளிகளுக்கும் 2 ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளையும் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கான கஷ்டம் எங்களுக்கு தெரிகிறது. இதனை கருத்தில் கொண்டும், பள்ளிகளின் கோரிக்கையை ஏற்றும் ஓராண்டு அங்கீகார ஆணை என்பது தற்போது 2 ஆண்டு தொடர் அங்கீகார ஆணையாக மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி முறையில் சிறப்பான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு உதாரணமாக ‘நீட்’ தேர்வில் 174 வினாக்கள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி உள்பட 12 தொலைக்காட்சிகள் மூலமாக பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக பாடங்கள் 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு சந்தேகம் ஏதாவது இருந்தால் 14417 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
அடுத்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் கரும்பலகைகள் அகற்றப்பட்டு ‘ஸ்மார்ட்’ போர்டு வைக்கப்படும். 7 ஆயிரம் அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் ஆவின் தலைவர் த.வேலழகன், காட்பாடி அரசு ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.ஜெயப்பிரகாசம், கூட்டுறவு வங்கி இயக்குனர் ஜனனீ பி.சதீஷ்குமார், கணியம்பாடி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் எம்.ராகவன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன், ஆற்காடு தொகுதி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் தா.கு.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story