ஓச்சேரி அருகே, கட்டிட மேஸ்திரி பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம் - கொலை செய்ததாக 2 பேர் கைது


ஓச்சேரி அருகே, கட்டிட மேஸ்திரி பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம் - கொலை செய்ததாக 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2020 6:30 PM IST (Updated: 15 Oct 2020 6:21 PM IST)
t-max-icont-min-icon

ஓச்சேரி அருகே கட்டிட மேஸ்திரி காயங்களுடன் பிணமாக கிடந்த வழக்கில், அவரை கொலை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). கட்டிட மேஸ்திரியான இவர் ஓச்சேரியை அடுத்த பொய்கைநல்லூர் மக்ளின் கால்வாயில் நேற்றுமுன்தினம் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவளூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுரேஷ் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் அறிவுரையின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின்பேரில் தாமல் பகுதியை சேர்ந்த மதன்குமார் (30), ஹரிஹரன் (31) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுரேஷ், மதன்குமார், ஹரிஹரன் 3 பேரும் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 12-ந் தேதி இரவு பொய்கைநல்லூர் மக்ளின் கால்வாயில் 3 பேரும் மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மதன்குமார், ஹரிஹரன் ஆகிய இருவரும் சேர்ந்து சுரேசை கல்லால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

அதைத்தொடரந்து கொலை வழக்காக பதிவு செய்து மதன்குமார், ஹரிஹரன் ஆகிய இருவரையும் அவளூர் போலீசார் கைது செய்தனர்.

Next Story