மாவட்ட செய்திகள்

நெல் கொள்முதல் செய்யக்கோரி கொள்முதல் நிலையத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. - திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு + "||" + To the procurement center requesting purchase of paddy The DMK came with a petrol can. MLA

நெல் கொள்முதல் செய்யக்கோரி கொள்முதல் நிலையத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. - திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு

நெல் கொள்முதல் செய்யக்கோரி கொள்முதல் நிலையத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. - திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு
நெல் கொள்முதல் செய்யக்கோரி கொள்முதல் நிலையத்திற்கு பெட்ரோல் கேனுடன் தி.மு.க. எம்.எல்.ஏ. வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆடலரசன். தி.மு.க.வை சேர்ந்த இவரது சொந்த ஊர் திருத்துறைப்பூண்டியை அடுத்த பாண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமம் ஆகும். இங்கு இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் விளைந்த 356 நெல் மூட்டைகளை திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொண்டு சென்றுள்ளார்.

அப்போது நெல்லில் அதிக ஈரப்பதம் இருப்பதாக கூறி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் பணியாளர்கள் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. தினசரி நெல்லை விற்பனை செய்ய முடியாமல் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு வந்து வந்து திரும்பிச் சென்றதால் ஆடலரசன் எம்.எல்.ஏ. மனம் உடைந்தார்.

இதனையடுத்து ஆடலரசன் எம்.எல்.ஏ. நேற்று தனது உதவியாளர் ஆசைத்தம்பி மற்றும் விவசாயிகள், தி.மு.க.வினருடன் நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்தார். அவர் வரும்போது பெட்ரோல் கேனையும் எடுத்து வந்தார். அங்கு பணியில் இருந்த கொள்முதல் நிலைய பணியாளர்களிடம் ஏன் எனது நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கிறீர்கள்? என்று கேட்டார்.

பின்னர் தனது நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றி தன்னையும் எரித்துக்கொண்டு தான் விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளையும் எரித்து விடுவதாக கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் உள்ளிட்டோர், ஆடலரசன் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நெல்லை கொள்முதல் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு பணியாளர்கள் ரூ.40 லஞ்சம் கேட்பதாகவும், கூடுதலாக பணம் தரும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதாகவும், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடப்பதாகவும் எம்.எல்.ஏ வருத்தத்துடன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது கொள்முதல் நிலையங்களில் போதிய சாக்கு இல்லை. நெல்லை மூடுவதற்கு தார்பாய் இல்லை என பணியாளர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.

நேரடி கொள்முதல் நிலையத்திற்கு பெட்ரோல் கேனுடன் எம்.எல்.ஏ. வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.