கைரேகை பதிவின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதால் காலதாமதம்: வேளாங்கண்ணியில், பொதுமக்கள் சாலைமறியல் - நாகையில் பலமணி நேரம் காத்திருந்த பொதுமக்கள்


கைரேகை பதிவின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதால் காலதாமதம்: வேளாங்கண்ணியில், பொதுமக்கள் சாலைமறியல் - நாகையில் பலமணி நேரம் காத்திருந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 15 Oct 2020 9:23 PM IST (Updated: 15 Oct 2020 9:23 PM IST)
t-max-icont-min-icon

கைரேகை பதிவின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதால் காலதாமதம் ஏற்படுவதாக வேளாங்கண்ணியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். நாகையில் பல மணிநேரம் பொதுமக்கள் காத்திருந்தனர்.

வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணியில் திருவாரூர் கூட்டுறவு மொத்த பண்டக சாலை உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது ரேஷன்கடைகளில் கைரேகை மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்களுக்கு தாமதமாகிறது. மேலும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதேபோல் நாகை காடம்பாடியில் பொதுப்பணியாளர் கூட்டுறவு சங்க நியாயவிலை கடையில் இணைய சேவை பிரச்சினையால் கைரேகை பதிவு செய்யும் எந்திரம் செயல்படவில்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

இதற்கு முன்பு நியாயவிலை கடைக்கு ஒருமுறை வந்தால் எங்களது ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டையை காண்பித்து பொருட்களை வாங்கி சென்றுவிடுவோம். தற்போது பல நாட்கள் அலைந்தாலும் பொருட்கள் வாங்க முடிவது இல்லை. எப்பொழுது வந்து கேட்டாலும் நெட்ஒர்க் பிரச்சினையால் கைரேகை பதிவு செய்யும் எந்திரம் செயல்படவில்லை. இதனால் பில் போட முடியவில்லை என்று விற்பனையாளர் கூறுகின்றனர். அப்படியே விற்பனை முனைய எந்திரம் செயல்பட்டாலும் கைரேகை பதிவு செய்யமுடியவில்லை.

இதனால் பொருட்கள் வாங்கமுடியாமல் திரும்பி செல்ல வேண்டிய அவலம் உள்ளது. ரேஷன்கடை அருகில் வீடு இருந்தால் அடிக்கடி வந்து போகலாம். நீண்ட தூரத்தில் வீடுகள் இருந்தால் எப்படி வந்து செல்லமுடியும். எனவே நெட்ஒர்க் பிரச்சினை ஏற்படாமல் சரி செய்து அனைவருக்கும் பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Next Story