ஆற்றில் விழுந்தவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம்
ஆற்றில் விழுந்தவர்களை மீட்பது எப்படி? என தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சர்வதேச பேரிடர் குறைப்பு மற்றும் விழிப்புணர்வு தினத்தையொட்டி ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் விழுந்தவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை புதுஆற்றில்(கல்லணைக்கால்வாய்) தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியை நேற்றுகாலை நடத்தினர்.
ஆற்றில் விழுந்தவர்களை காலிப்பாட்டில்கள், தெர்மாகோல், உரிக்காத தேங்காய், பந்து, கேன், கார் டியூப், காலி குடங்கள், வாழை மரம் ஆகியவற்றின் மூலம் எப்படி மீட்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் ரப்பர் படகுகள் மூலம் ஆற்றில் விழுந்தவர்களை எப்படி மீட்க வேண்டும் எனவும், அப்படி மீட்பவர்கள் மயங்கி இருந்தால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எந்த முறையில் அளிக்க வேண்டும் எனவும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் முன்னிலையில் செயல்விளக்கம் அளித்தனர்.
மேலும் தீ விபத்து ஏற்பட்டால் எந்த முறையில் தீயை அணைக்க வேண்டும் எனவும், படகில் பயணம் செய்யும் போது உயிர்காக்கும் கவச உடை அணிந்து பயணம் செய்ய வேண்டும் எனவும் தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story