விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு பொருத்தப்பட்டது
மன்னார்குடி அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு பொருத்தப்பட்டது.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி தமிழரசி. இவர்களின் மகன் குபேரன் (வயது19). கடந்த மாதம் 30-ந்தேதி மோட்டார் சைக்கிளில் செல்லும் போது விபத்துக்குள்ளாகி குபேரன் படுகாயமடைந்தார். காயமடைந்த அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சிகிச்சை பலனின்றி குபேரன் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குபேரனின் பெற்றோர்கள் சம்மதித்தனர். இந்தநிலையில் குபேரனின் இதயம், இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், இதய வால்வுகள், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 5 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மகன் இறந்தாலும் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்த ராஜேந்திரன், தமிழரசி தம்பதிகளின் செயலை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். இறந்த பிறகும் தங்கள் மகன் ஐந்து பேரிடம் உயிர் வாழ்வதாக குபேரனின் பெற்றோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story