ஊட்டியில் கால்வாய் தோண்டிய போது தடுப்புச்சுவர் சரிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளி - தீயணைப்பு வீரர்கள் 1 மணிநேரம் போராடி மீட்டனர்
ஊட்டியில் கால்வாய் தோண்டும் போது தடுப்புச்சுவர் சரிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் தொழிலாளி சிக்கினார். அவரை தீயணைப்பு நிலைய வீரர்கள் 1 மணிநேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மேரீஸ்ஹில் சாலையின் அடிப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதற்கிடையே அப்பகுதியில் புதிதாக வீடு கட்டும் தனி நபர் ஒருவர் தனது வீட்டில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரை குழாய்கள் மூலம் கொண்டு சென்று நகராட்சி சாக்கடை கால்வாயில் இணைப்பதற்காக சொந்த செலவில் அதற்கான பணிகளை மேற்கொண்டார். இதற்காக ஊட்டி நகராட்சி நிர்வாகத்திடம் குறிப்பிட்ட பணம் செலுத்தி அனுமதி வாங்கி உள்ளார். இதை தொடர்ந்து தொழிலாளர்கள் குழி தோண்டி கால்வாய் ஏற்படுத்தி புதியதாக குழாய்களை பதித்து, அந்த வீட்டில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரை நகராட்சி கால்வாயில் இணைக்க திட்டமிட்டனர். இதற்காக நேற்று மாலை மேரீஸ்ஹில் பகுதியில் தொழிலாளர்கள் கால்வாயை தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென கால்வாயின் பக்கவாட்டில் இருந்த தடுப்புச்சுவர் மற்றும் மண் சரிந்து விழுந்தது. இதில் ஓல்டு ஊட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 40) என்ற தொழிலாளி சிக்கி உயிருக்கு போராடினார். மற்ற தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். ரமேஷ் மண்ணுக்குள் சிக்கியதை பார்த்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர். இதையடுத்து அவர்கள் மண்வெட்டி, கடப்பாரை கொண்டு மண் மற்றும் தடுப்புச்சுவரை அப்புறப்படுத்தி தொழிலாளியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த முயற்சி பலனளிக்க வில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சந்திரகுமார் தலைமையில், ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தொழிலாளியை உயிருடன் மீட்டனர். பின்னர் அவரை ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார், வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story