ரூ.43 லட்சம் கடனை கொடுக்காமல் இருக்க நிதிநிறுவன அதிபரை கொல்ல முயன்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது


ரூ.43 லட்சம் கடனை கொடுக்காமல் இருக்க நிதிநிறுவன அதிபரை கொல்ல முயன்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 15 Oct 2020 9:15 PM IST (Updated: 15 Oct 2020 10:07 PM IST)
t-max-icont-min-icon

ரூ.43 லட்சம் கடனை திருப்பி கொடுக்காமல் இருப்பதற்காக நிதிநிறுவன அதிபரை கூலிப்படை மூலம் தீர்த்து கட்ட முயன்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுப்பட்டதாவது:-

கோவை,

கோவை டாடாபாத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் நோயல் (வயது 47). நிதிநிறுவன அதிபரான இவர், கட்டிடங்களுக்கு உள் மற்றும் வெளி அலங்காரம் செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவரிடம் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த கவிதா ரூ.20 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதேபோல் கவிதாவின் நண்பர் பிரதீப் ராஜாவும் ரூ.23 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நோயல் கொடுத்த கடனை திருப்பி கேட்டு வந்தார். இதையடுத்து கடனை திரும்பி கொடுக்காமல் இருக்க ஜார்ஜ் நோயலை தீர்த்து கட்ட கவிதா, அவருடைய கணவர் மதன்பிரபு, பிரதீப் ராஜா, அவருடைய உதவியாளர் சூர்யா (22) ஆகியோர் முடிவு செய்தனர். இதற்காக திருச்சியை சேர்ந்த கூலிப்படையினர் வெங்கடேஷ், பாரதிதாசன் ஆகியோரை ரூ.5 லட்சம் பேசி கோவைக்கு அழைத்து வந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி, கடன் தொகையை தருவதாகவும் ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில் உள்ள ஒரு உணவகம் அருகே வருமாறும் ஜார்ஜ் நோயலை கவிதா அழைத்துள்ளார். இதனை நம்பி அவர் காரில் அந்த இடத்துக்கு வந்தார். அப்போது பணத்தை கொடுப்பதுபோல் கொடுத்தனர்.

இதற்கிடையில் ஏற்கனவே தயாராக நின்ற கூலிப்படையினர் ஜார்ஜ் நோயலை கத்தியால் குத்தி அவரை காருக்குள் வைத்து கொல்ல முயன்றனர். கத்தி குத்து காயங்களுடன் அவர் அலறிதுடித்தார். இதனைக்கண்ட பொதுமக்கள் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து கூலிப்படையினர் மற்றும் கவிதா உள்பட அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜார்ஜ் நோயல் உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவத்தில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தீவிர விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய கூலிப்படை உள்பட 6 பேரை கைது செய்தார். கைதான பிரதீப் ராஜாவுக்கு கொரோனா என்பதால் அவர் ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் நிதிநிறுவன அதிபரை கொல்ல முயற்சி செய்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மதன்பிரபு, சூர்யா, கூலிப்படையை சேர்ந்த வெங்கடேஷ், பாரதிதாசன் ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான நகல் கோவை சிறையில் அவர்களிடம் வழங்கப்பட்டது. பெண் என்பதால் கவிதாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story