குமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் மீட்பு - மலையோர கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பாறை அருகே 14 மலையோர கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டன. மோதிரமலையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் மீட்கப்பட்டனர்.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குலசேகரம் அருகே பேச்சிப்பாறை, கோதையாறு, பெருஞ்சாணி, திற்பரப்பு போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் நேற்று அதிக அளவில் வெள்ளம் கொட்டியது.
பேச்சிப்பாறை அருகே குற்றியாறு, கல்லாறு, மாங்காமலை, மிளாமலை, முடவன்பொற்றை, குழவியாறு போன்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. மலைகிராமங்களில் பாயும் கிழவியாறு, கல்லாறு, கோதையாறு போன்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆறுகளின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலங்களை வெள்ளம் மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், குற்றியாறு, கல்லாறு, கிழவியாறு குடியிருப்பு, நடனம் பொற்றை, மாங்காமலை, மோதிரமலை உள்பட 14 மலையோர கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
மோதிரமலையில் கிழவியாற்றின் குறுக்கே சப்பாத்து பாலம் உள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்த நிலையில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து செல்கிறது. நேற்று மதியம் 2.30 மணியளவில் மோதிரமலையை சேர்ந்த மணி (வயது 47), சதீஷ் (32) ஆகியோர் மோட்டார் சைக்கிள் மூலம் சப்பாத்து பாலத்தை கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது, கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் அவர்கள் இருவரும் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய இருவரும் ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என அபாய குரல் எழுப்பினர். அவர்களது சத்தம் கேட்டு கரையோரம் நின்ற பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு கயிறுகளை வீசி அவர்கள் இருவரையும் மீட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story