குளச்சல் கடலில் சூறைக்காற்று கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
குளச்சல் கடலில் சூறைக்காற்று வீசியதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் கட்டுமரங்களை கரையில் நிறுத்தியிருந்தனர்.
குளச்சல்,
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் சூறைக்காற்றும் வீசுகிறது. நேற்று முன்தினம் முதல் குளச்சல் கடல் பகுதியில் சூறை காற்றுடன் மழை பெய்து வருவதால் கடலில் கட்டுமரங்களை மீனவர்களால் செலுத்த முடியவில்லை.
குளச்சலை தங்குதலமாக கொண்டு 300 விசைப்படகுகள், 1,000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடி தொழிலை செய்து வருகிறார்கள். நேற்று சூறைகாற்று வீசியதால் குளச்சல், கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, கொட்டில்பாடு, மண்டைக்காடு புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதி கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கட்டுமரங்கள் பாதுகாப்பாக மேட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில கட்டுமரங்கள் கடலுக்கு சென்றன. அதில் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். குளச்சல் பகுதியில் நேற்று மீன் வரத்து இல்லாததால் வியாபாரிகள், மீன் பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனால் விசைப்படகுகள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பின. அவற்றுள் வழக்கம் போல் கொழிச்சாளை மீன்கள் ஏராளமாக கிடைத்தன. அந்த மீன்களை மீன் அரவை கம்பெனிக்காக வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story