பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மோட்டார் சைக்கிள்களை வாங்க குவிந்த இளைஞர்கள்


பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மோட்டார் சைக்கிள்களை வாங்க குவிந்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 15 Oct 2020 11:54 PM GMT (Updated: 15 Oct 2020 11:54 PM GMT)

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரால் ஏலம் விடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை வாங்க இளைஞர்கள் குவிந்தனர்.

நெல்லை,

நெல்லை மாநகரில் போலீசாரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் வாகன உரிமையாளர்களால் உரிமை கோரப்படாத மற்றும் திரும்ப பெறாமல் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 411 மோட்டார் சைக்கிள், மொபட், ஸ்கூட்டர்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

அந்த வாகனங்களின் விற்பனை நேற்று தொடங்கியது. இதையொட்டி ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். மோட்டார் சைக்கிள் வாகன புரோக்கர்களும் அதிக அளவு வந்தனர். அவர்களுக்கு வரிசையாக ரூ.20 பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்கப்பட்டது. மேலும் கேட்பவர்களின் ஆதார் கார்டு நகல், ரூ.1,000 முன்வைப்பு தொகை பெறப்பட்டது.

இன்றும் நடக்கிறது

பின்னர் வாகனங்கள் வரிசை எண் அடிப்படையில் ஏலம் விடப்பட்டது. நேற்று பாதி அளவுக்கு வாகனங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. ரூ.500 முதல் பல ஆயிரம் வரை வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட ஒரு ரக மோட்டார் சைக்கிளின் என்ஜின்களுக்கு மவுசு அதிகரித்ததால் இந்த ரக மோட்டார் சைக்கிள் ரூ.35 ஆயிரம் வரை ஏலம் கேட்டு விற்பனை செய்யப்பட்டது. மீதமுள்ள மோட்டார் சைக்கிள் இன்று (வெள்ளிக்கிழமை) ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story