பாளையங்கோட்டையில் கை கழுவுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


பாளையங்கோட்டையில் கை கழுவுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Oct 2020 11:57 PM GMT (Updated: 15 Oct 2020 11:57 PM GMT)

பாளையங்கோட்டையில் கை கழுவுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உலக கை கழுவுதல் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுகாதார பணியாளர்களிடம் கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “ உலக மக்கள் நாள்தோறும் தங்களது கைகளை தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15-ந்தேதி உலக கை கழுவும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பது நோய் தடுப்புக்கு ஒரு முக்கிய வழியாகும் என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். கைகளை அடிக்கடி கழுவுவதன் மூலம் வைரஸ், பாக்டீரியா போன்ற எண்ணற்ற கண்களுக்கு தெரியாத கிருமிகள் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் பொதுமக்கள் நோய்கள் பரவாமல் சுகாதாரமாக இருக்க முடியும்“ என்றார்.

நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், மாநகர நல அலுவலர் சுகன்யா, சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story