ஈரோட்டில் மீண்டும் தொடங்கியது மக்கள் தொகை பொருளாதார கணக்கெடுப்பு பணி


ஈரோட்டில் மீண்டும் தொடங்கியது மக்கள் தொகை பொருளாதார கணக்கெடுப்பு பணி
x
தினத்தந்தி 16 Oct 2020 5:47 AM IST (Updated: 16 Oct 2020 5:47 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மக்கள் தொகை பொருளாதார கணக்கெடுப்பு பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

ஈரோடு,

மத்திய அரசின் 7-வது மக்கள் தொகை பொருளாதார கணக்கெடுப்பு, தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. இதற்காக நியமனம் செய்யப்பட்டு உள்ள பொது சேவை மையத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வீடு, கடை, தொழில் நிறுவனங்களுக்கு சென்று அங்கு உள்ளவர்களின் விவரங்களை மொபைல் போனில் உள்ள ‘ஆப்‘பில் சேகரித்து வருகிறார்கள்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி கடந்த மார்ச் மாதம் இறுதி வரை நடந்தது. கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதங்களாக இந்த பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மக்கள் தொகை பொருளாதார கணக்கெடுப்பு பணி நேற்று மீண்டும் தொடங்கியது.

பொருளியல்-புள்ளியல் துறை

இதன் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில் ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், திருஞானம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இதுகுறித்து ஆர்.டி.ஓ. சைபுதீன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 6 கணக்கெடுப்புகளும் பொருளியல் மற்றும் புள்ளியல் துறையால் மட்டுமே நடத்தப்பட்டது. தற்போது கணக்கெடுப்பு பணி செல்போனில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு உள்ளதால் விவரங்கள் மிகவும் துல்லியமாக இருக்கும். அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இந்த கணக்கெடுப்பு மூலம் எடுக்கப்பட்ட விவரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

ரூ.10 ஆயிரம் ஊதியம்

எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் செய்து வருபவர்கள் இந்த கணக்கெடுப்பு பணியில் விவரங்கள் சேகரிக்க அடையாள அட்டையுடன் வரும் பணியாளர்களுக்கு தங்களது விவரங்களை எந்தவித தயக்கமும் இன்றி வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கணக்கெடுப்பின்போது, வீட்டில் உள்ள நபர்களின் பெயர், விலாசம், செல்போன் எண், வேலை அல்லது தொழில், சுய தொழிலாக இருந்தால் அதன் பெயர் அங்கு பணி செய்வோர் விவரம், அவர்களது வருவாய், செலவு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. தொழில் நிறுவனமாக இருந்தால், அந்நிறுவனத்தின் விவரம், அங்கு பணி செய்வோர் எண்ணிக்கை, முதலீடு, லாபம், செலுத்தும் வரி இனங்கள், ஜி.எஸ்.டி., செலுத்தும் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

சேகரிக்கப்படும் முழு தகவல்களும் மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தற்போது நடக்கும் கணக்கெடுப்பு பணிக்கு, ஒப்பந்த அடிப்படையில் மாதம், ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் பணி செய்ய விரும்புவோர் வந்தால், அவர்களுக்கும் பணி வழங்கப்படும் என்று பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Next Story