கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ராட்டின தொழிலாளர்கள்


கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ராட்டின தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 16 Oct 2020 9:03 AM IST (Updated: 16 Oct 2020 9:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கினால் ராட்டின தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

விழுப்புரம்,

சிறுவர்- சிறுமிகளின் உள்ளம் கவர்ந்த விளையாட்டுகளில் ராட்டினம் சுற்றுவதும் ஒன்று. திருவிழாக்கள், பண்டிகை நாட்கள், கோவில், தர்கா, கிறிஸ்தவ ஆலய விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் ராட்டினம் சுற்றும் பழக்கம் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் அதிகமாக உள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் ராட்டினத்தை நம்பியே பிழைப்பு நடத்தும் குடும்பங்கள் ஏராளம் உள்ளன.

முக்கியமான திருவிழாக்களுக்கு ராட்டினங்களை லாரியில் பிரித்து ஏற்றிச்சென்று திருவிழா நடைபெறும் இடங்களில் உரிய அனுமதி பெற்றோ அல்லது ஏலத்தில் எடுத்தோ ராட்டினம் போடுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுற்றுகின்ற வகையில் ராட்டினங்கள் உள்ளன. இவர்கள் வருடம்முழுவதும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள், கோடைகால பள்ளி விடுமுறை நாட்களில் ஒவ்வொரு நகரமாக இடம்பெயர்ந்து ராட்டினத்தை கொண்டுசென்று சுற்றி பிழைப்பு நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ராட்டின தொழில் முற்றிலும் முடங்கி போயுள்ளது. பல்வேறு பணிகளுக்கு ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் ராட்டின தொழிலுக்கு இன்னும் தளர்வு அளிக்கப்படவில்லை. ஏனெனில் ராட்டினம் சுற்றுவதில் பெரும்பாலும் சிறுவர், சிறுமிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாலும், ராட்டினம் சுற்றுதலில் சமூக இடைவெளியை பின்பற்றி அமர்வது என்பது மிகவும் கடினம் என்பதாலும் இன்னும் இந்த தொழிலுக்கு அரசால் தளர்வு அளிக்கப்படவில்லை.

ஊரடங்கினால் 4 மாதங்களுக்கும் மேலாக பூட்டிக்கிடந்த வழிபாட்டு தலங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் வழிபாட்டு தலங்களில் தினந்தோறும் வழக்கமாக நடைபெறும் வழிபாடு சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ராட்டின தொழிலுக்கு இன்னும் அரசால் அனுமதி வழங்கப்படாததால் அந்த தொழிலையே நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போதிய வருவாய் இல்லாத நிலையில் ராட்டின தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் மிகுந்த ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சில குடும்பத்தினர் ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் ராட்டின தொழிலாளர்கள் ஆங்காங்கே ராட்டினங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அப்படியே போட்டுவிட்டு ஊருக்கு வந்துவிட்ட நிலையில் அவர்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கைசெலவிற்கு கூட பணம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. அடுத்துவரும் சில மாதங்களுக்கும் தொழில் நடக்க வாய்ப்பு இல்லை என்பதால் ராட்டின தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் அனைவரும் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளனர். கடந்த 6 மாதங்களாக வேலையிழந்து உள்ளதால் ராட்டினங்களை சரி செய்யவே போதிய வருமானம் இல்லாமல் தவிப்பதாகவும் தமிழக அரசு, உரிய நிவாரண உதவி வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story