மாவட்ட செய்திகள்

செயலாளரை இடமாற்றக்கோரி அஞ்சூர் ஊராட்சி தலைவர், கிராம மக்கள் உண்ணாவிரதம் + "||" + Transfer Secretary Anjur panchayat leader, The villagers are fasting

செயலாளரை இடமாற்றக்கோரி அஞ்சூர் ஊராட்சி தலைவர், கிராம மக்கள் உண்ணாவிரதம்

செயலாளரை இடமாற்றக்கோரி அஞ்சூர் ஊராட்சி தலைவர், கிராம மக்கள் உண்ணாவிரதம்
அஞ்சூர் ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுகுணா வெங்கடேசன். பட்டியலின வகுப்பை சேர்ந்தவர். இவரது தலைமையில் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் சிலர் நேற்று பர்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஊராட்சி செயலாளர் சக்திவேலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா வெங்கடேசன் கூறியதாவது:-

நான் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றேன். 9 மாதங்கள் முடிந்த நிலையிலும், ஊராட்சி செயலாளர் சக்திவேல் தன்னிச்சையாக செயல்படுகிறார். நான் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் என்பதால், என்னை ஊராட்சி தலைவியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இதுகுறித்து நான் கலெக்டர் அலவலகத்திலும், வட்டார வளரச்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் இருந்தால் ஓட்டு போட்டு என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு எந்த பணிகளும் செய்ய முடியாது. அவர் கொடுத்த தொடர் மன உளைச்சலால் எனது கணவர் வெங்கடேசன் இறந்து விட்டார். அதற்கு நீதி வேண்டும். ஊராட்சி செயலாளரை வேறு இடத்திற்கு மாற்றம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பர்கூர் தாசில்தார் சண்முகம், பர்கூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானபிரகாசம், முருகன், பர்கூர் ஒன்றியக்குழு தலைவர் கவிதா கோவிந்தராசன் மற்றும் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊராட்சி செயலாளர் சக்திவேலை இடமாற்றம் செய்துள்ளதாகவும், இதனால் போராட்டத்தை கைவிடுமாறும் அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பர்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.