அத்தனூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி - வீட்டுக்கு மின் இணைப்பு கொடுத்தபோது பரிதாபம்


அத்தனூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி - வீட்டுக்கு மின் இணைப்பு கொடுத்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 16 Oct 2020 4:35 AM GMT (Updated: 16 Oct 2020 4:35 AM GMT)

அத்தனூரில் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுத்தபோது, மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

வெண்ணந்தூர்,

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாவடிதெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி மோகனா. இந்த தம்பதியினரின் மகன் முரளிதரன் (வயது 20). மகள் கீர்த்தனா (19). முரளிதரன் தொழிற்கல்வி படித்து விட்டு, எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை முரளிதரன் ஆலம்பட்டி பகுதியில் உள்ள மாதேஸ்வரன் என்பவரது வீட்டிற்கு வயரிங் வேலைக்கு சென்றார். வேலையை முடித்த பிறகு, மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு கொடுப்பதற்கு மின்சாரத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் அந்த பகுதியின் வயர்மேன் சதீஷ்குமார் (43) என்பவர் வந்தார். அவர் முரளிதரனிடம் மின்சாரத்தை நிறுத்தி விட்டேன். நீங்கள் மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பு கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து முரளிதரன் அங்கிருந்த மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பு கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது மின் கம்பத்திற்கு மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அதனை கவனிக்காமல் முரளிதரன் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென உயர் மின் அழுத்த கம்பி அவர் மீது உரசியது.

இதில் மின்சாரம் அவரை தாக்கியதில், எலக்ட்ரீசியன் முரளிதரன் மின் கம்பத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த முரளிதரனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வெண்ணந்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் மின் இணைப்பை துண்டித்து, மின் கம்பத்தில் இருந்து முரளிதரனின் உடலை மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

அப்போது, 15 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற மகனை இழந்துவிட்டோமே! என்று வெங்கடாசலம், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது.

இந்தநிலையில் மின் விபத்துக்கு காரணமான வயர்மேன் சதீஷ்குமாரை கைது செய்யக்கோரி, முரளிதரனின் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, முரளிதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வயர்மேன் சதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டுக்கு மின் இணைப்பு கொடுத்தபோது எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story