வேளாண் திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பேச்சு


வேளாண் திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 16 Oct 2020 5:26 AM GMT (Updated: 16 Oct 2020 5:26 AM GMT)

வேளாண் திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூரில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட தலைவர் பெருமாள் வரவேற்று பேசினார். ஊராட்சி தலைவர் சுமதி முருகேசன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் மீத்தேன் போன்ற கனிம வளங்கள் அதிகளவில் உள்ளதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தின் மீது கண் வைத்து, வளங்களை சுரண்ட தீர்மானித்துள்ளனர். மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமாகும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விவசாயிகள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் 1 கோடியே 25 லட்சம் விவசாயிகள் உள்ளனர். ஆனால் மத்திய அரசு 25 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே கிசான் திட்டத்தில் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கியுள்ளது. மேலும் மத்திய அரசால் விவசாயிகளை முழுமையாக கணக்கெடுக்க முடியவில்லை. மேலும் விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய விவசாய நிலங்களையும் கணக்கிட முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு மத்திய அரசால் சலுகைகள் வழங்கவும் முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story