கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை


கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2020 11:24 AM IST (Updated: 16 Oct 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

கரூர்,

கரூர்-கோவை ரோட்டில் உள்ள ஆண்டாங்கோவில் ஜீவாநகர் ரோட்டுகடை பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் ஒருசிலர் தாங்களாகவே முன்வந்து கடையை காலி செய்தனர். ஒரு சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

இந்நிலையில் நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு நேரில் சென்றனர். மேலும் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளுக்கு கொடுக்கப்பட்ட மின்இணைப்புகளையும், வயர்களை அகற்றியும், கடைகளில் இருந்த பொருட்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெளியே தூக்கி சென்று வைத்துவிட்டு இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு சில கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

Next Story