பிறந்த நாளையொட்டி அப்துல்கலாம் நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர் மரியாதை - குடும்பத்தினர்-கலெக்டர் பங்கேற்பு


பிறந்த நாளையொட்டி அப்துல்கலாம் நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர் மரியாதை - குடும்பத்தினர்-கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Oct 2020 9:33 AM GMT (Updated: 16 Oct 2020 9:33 AM GMT)

அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கலெக்டர் மற்றும் கலாம் குடும்பத்தினர் நேற்று மரியாதை செலுத்தினார்கள்.

ராமேசுவரம்,

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் பேய்க்கரும்பில் கலாம் மணிமண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

அரசு சார்பில் கலாம் நினைவிடத்தில், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அப்துல்கலாம் அண்ணன் மகன் ஜெய்னுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர், பேரன்கள் ஷேக்தாவூத், ஷேக்சலிம் மற்றும் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அங்கு ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ராமேசுவரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாஜ், சப்-கலெக்டர் சுகபுத்ரா, தாசில்தார் அப்துல் ஜபார், கலாமின் உறவினர் நிஜாமுதீன், ஜமாத் தலைவர் செய்யது அகமது, கலாமின் நண்பர் டாக்டர் விஜயராகவன், மணிமண்டப பொறுப்பாளர் அன்பழகன், நகைச்சுவை நடிகர் தாமு, பா.ஜனதா மாவட்ட தலைவர் முரளிதரன், சமூக ஆர்வலர்கள் கராத்தே பழனிச்சாமி, என்ஜினீயர் முருகன், நாகராஜ், முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் பாம்பனில் இருந்து அப்துல் கலாம் மணிமண்டபம் வரை சாலையின் இருபுறமும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் வீரராகவராவ் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். அதுபோல் அப்துல் கலாம் நினைவிடத்தில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பயணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் மதுரையில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் சைக்கிள் பயணமாக புறப்பட்டனர். அந்த பயண குழுவினர் நேற்று பகல் 11 மணி அளவில் கலாம் மணிமண்டபத்துக்கு வந்து தங்களது விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்தனர். அவர்களை கலெக்டர் வீரராகவராவ் பாராட்டினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அப்துல் கலாம் நினைவிடத்தில் பொதுமக்களும், மாணவர்கள் யாரும் மரியாதை செலுத்த அனுமதிக்கப்படவில்லை. அப்துல்காலம் படித்த பள்ளியான மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 89 மாணவர்களின் இல்லங்களில் கலாம் நூலகம் அமைக்கும் விதமாக அப்துல்கலாம் எழுதிய 8 புத்தகங்கள் அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நேரு யுவகேந்திரா மாநில இயக்குனர் நடராஜ், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், தலைமை ஆசிரியை ராஜலட்சுமி, விழாக்குழு பொறுப்பாளர் சாரங்கன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story