பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருள் வாங்கமுடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருள் பெற சிறப்பு சலுகை - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருள் வாங்கமுடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருள் பெற சிறப்பு சலுகை - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2020 4:00 PM IST (Updated: 16 Oct 2020 3:51 PM IST)
t-max-icont-min-icon

பயோமெட்ரிக் முறையில் நியாயவிலை கடைக்கு சென்று அத்தியாவசிய பொருள் பெற முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் அரசின் உத்தரவுப்படி கடந்த 1-ந் தேதி முதல் பொது வினியோகத் திட்டத்தில் கணினிமயமாக்கப்பட்ட பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஒவ்வொரு குடும்ப அட்டை தாரரும் அவரது கைரேகையை நியாய விலை கடையில் உள்ள எந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே உணவுப்பொருள் பெற இயலும். இந்த திட்டத்தில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அத்தியாவசிய பொருட்கள் பெற முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த குறையை போக்குவதற்கு தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குடும்ப அட்டைதாரர்களில் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள், அல்லது வயது முதிர்ந்தவர்கள், நியாயவிலை கடைக்கு சென்று உணவுப் பொருட்களை பெற முடியாத நிலை இருந்தால் அவர்கள் அதுதொடர்பான ஒரு அங்கீகார சான்று கோரிக்கையை நியாயவிலை கடைகளில் கடை விற்பனையாளரிடம் பெற்று பூர்த்தி செய்து நியாயவிலைக் கடை பணியாளர் வசம் ஒப்படைக்க வேண்டும். அந்த படிவத்தில் நியாயவிலை கடைக்கு வர முடியாதவர்கள் சார்பில் உணவுப்பொருட்களை பெற அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் விவரம் தவறாது பூர்த்தி செய்ய வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட நபர் உணவு பொருள் பெறுவதற்கு செல்லும்போது யாருக்காக பொருள் வாங்க உள்ளாரோ அவர்களது குடும்ப அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும். மேலும் குடும்ப அட்டைகளில் வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், தவிர கடைக்கு வந்து பொருள் பெறும் தகுதி உள்ள நபர்கள் இருந்தால் அவர்கள் இந்த வசதியை தேர்வு செய்ய இயலாது.

எனவே சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களில் நியாயவிலை கடைக்கு சென்று பொருட்கள் வாங்க தகுதியுடைய நபர்கள் இல்லாத வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அரசின் இந்த சலுகையை பயன்படுத்தி தடையில்லாமல் உணவு பொருட்களை பெற்றுச் செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story