பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.3½ லட்சம் குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் - வேன் டிரைவர் கைது


பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.3½ லட்சம் குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் - வேன் டிரைவர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2020 6:45 PM IST (Updated: 16 Oct 2020 6:34 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், வேனில் கடத்திவரப்பட்ட ரூ.3½ லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வேன் டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

அணைக்கட்டு,

பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி ஒரு வேன் சென்றது. அந்த வேனை சுங்கச்சாவடி அருகே நிறுத்தி வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மைதாமாவு எடுத்துச் செல்வதாக கூறினார். சந்தேகமடைந்த போலீசார் ஒரு பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது.

அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு வேனை கொண்டு சென்று சோதனை செய்தனர். அப்போது 50 பார்சல்களில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணை நடத்தியதில் வேன் டிரைவர் அரியானா மாநிலம் ஐசல்கார் மாவட்டம் தால்வண்டிரூக்கா கிராமத்தைச் சேர்ந்த சபாஷ் சந்தரின் மகன் அணில்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story