போலீசார் அடிக்கடி விசாரணைக்கு அழைத்ததால் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி - கும்பகோணத்தில் பரபரப்பு
போலீசார் அடிக்கடி விசாரணைக்கு அழைத்ததால் மனம் உடைந்த தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வேப்பத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் சுந்தரமூர்த்தி(வயது 35). கூலித்தொழிலாளியான இவர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் சுந்தரமூர்த்தியை அடிக்கடி அழைத்து விசாரணை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சுந்தரமூர்த்தி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறி கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரி பகுதியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தின் உச்சியில் மண்எண்ணெய் கேனுடன் ஏறி நின்று கூச்சல் போட்டுள்ளார்.
இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சுந்தரமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த சுந்தரமூர்த்தி செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீசார் இனிமேல் தேவையில்லாமல் போலீசார் விசாரணைக்கு அழைக்க மாட்டார்கள். எனவே இனிமேல் ஒருபோதும் இவ்வாறு நடக்க கூடாது என அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story