மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் கோரி இன்று நடக்க இருந்த சாலைமறியல் கைவிடப்பட்டது - சமாதான கூட்டத்தில் உடன்பாடு


மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் கோரி இன்று நடக்க இருந்த சாலைமறியல் கைவிடப்பட்டது - சமாதான கூட்டத்தில் உடன்பாடு
x
தினத்தந்தி 16 Oct 2020 7:30 PM IST (Updated: 16 Oct 2020 7:09 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் கோரி இன்று(வெள்ளிக்கிழமை) சாலைமறியல் நடக்க இருந்தது. சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது.

மன்னார்குடி,

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் இதயநோய், நரம்பியல், சிறுநீரகம் ஆகிய பிரிவுகளுக்கு டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்த வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் புண்ணியகோட்டி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

இதில் திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர்ராஜமூர்த்தி, மன்னார்குடி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், தாசில்தார் கார்த்தி, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் கோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் வை.செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நடக்க இருந்த சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர்.

Next Story