பொள்ளாச்சியில் பரபரப்பு: ரூ.1 கோடி கேட்டு நிதி நிறுவன அதிபர் கடத்தல் - தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது
பொள்ளாச்சியில் ரூ.1 கோடி கேட்டு நிதி நிறுவன அதிபர் கடத்திய தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி-கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 40), நிதிநிறுவன அதிபர். இவர் கடந்த 13-ந் தேதி மதியம் 12 மணிக்கு கோட்டூர் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கார், மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது.
பின்னர் அவரது கைகளை பின்புறமாக கட்டியதுடன், வாய் மற்றும் கண்ணை துணியால் கட்டி காருக்குள் ஏற்றி கடத்தி சென்றனர். பிறகு அவரை கோவை ரோடு தாமரை குளம் பகுதியில் உள்ள தோட்டத்து சாலைக்கு கொண்டு சென்று, அவரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றாம்பாளையம் பகுதியில் இறக்கி விட்டு காரில் தப்பி சென்றனர்.
இதையடுத்து சாந்தகுமார் தனது கையில் கட்டப்பட்ட இருந்த கட்டுகளை அவிழ்த்துவிட்டு உறவினர் உதவியுடன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் கடத்தல் கும்பலை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்வேல் பெருமாள், அழகேசன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
மேலும் கோட்டூர் ரோட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் தி.மு.க. பிரமுகரும், நகராட்சி முன்னாள் கவுன்சிலருமான கோட்டூர் ரோடு சேரன் காலனியை சேர்ந்த கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து கண்ணன், காமாட்சி நகரை சேர்ந்த துணி வியாபாரி நவீன்குமார் (29), கண்ணப்ப நகரை சேர்ந்த ஸ்டாலின் (30), சூளேஸ்வரன்பட்டி காந்திபுரத்தை சேர்ந்த பெயிண்டர் ஜான்சன் (26) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கடத்தல், கொலை முயற்சி, தகாத வார்த்தையால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சொகுசு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆனைமலையை சேர்ந்த பாலாஜி, சூளேஸ்வரன்பட்டி சதீஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் நிதி நிறுவன அதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story