ஆதார் கொண்டு வராத விவசாயிகளுக்கு உரம் வழங்கக்கூடாது - விற்பனையாளர்களுக்கு, அதிகாரி உத்தரவு
ஆதார் கொண்டு வராத விவசாயிகளுக்கு உரம் வழங்கக்கூடாது என்று விற்பனையாளர்களுக்கு, அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
கூடலூர்,
நீலகிரி மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் உர விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம், கூடலூர் காபி ஹவுஸ் அரங்கில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் வேளாண் உதவி இயக்குனர்(உர கட்டுப்பாடு) ஷாகிர் நவாஸ் கலந்துகொண்டு உர விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உர விற்பனையாளர்கள் கண்டிப்பாக லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். பதிவேடுகள், ரசீது புத்தகம் ஆகியவற்றை சரியாக பராமரிக்க வேண்டும். விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து, உரம் விற்பனை செய்ய வேண்டும். ஆதார் கொண்டு வராத விவசாயிகளுக்கு உரம் வழங்கக்கூடாது. 6 மாதத்துக்கு ஒரு விவசாயிக்கு 300, பெரிய தேயிலை தோட்ட கம்பெனிகளுக்கு 1,500 உர மூட்டைகள் மட்டுமே வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. எண்கள் இல்லை என்றால் உரம் வழங்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். இதில் உர விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் சம்பத், மணிகண்டன் மற்றும் கூடலூர், பந்தலூர் பகுதி விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் வேளாண் உதவி இயக்குனர்(உர கட்டுப்பாடு) ஷாகிர் நவாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளச்சந்தையில் உரம் விற்பதை தடுக்கும் வகையில் பாயிண்ட் ஆப் எந்திரம் மூலம் உரம் விற்பனை செய்யப்படுகிறது. ஆதார் உள்ளிட்ட விவரங்களை எந்திரத்தில் பதிவு செய்தவுடன் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு வழங்கப்படும் உர மூட்டைகளின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். இதன் மூலம் யாருக்கு எவ்வளவு உரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை இந்திய அரசு மற்றும் தமிழக வேளாண் இயக்குனர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நீலகிரி மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஒரு மாதத்துக்கு 1000 டன் யூரியா, 500 டன் பொட்டாசியம், 100 டன் டி.ஏ.பி. உரங்கள் வினியோகிக்கப்படுகிறது. சராசரியாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் டன் உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உர தேவை கணிசமாக குறைந்து விடுகிறது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் உரங்கள் பயன்பாடு அதிகரித்து விடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story