காலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்டம்? முன்னேற்பாட்டு பணிகளில் அதிகாரிகள் தீவிரம்
காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எச்.வசந்தகுமார் எம்.பி. மரணம் அடைந்ததை தொடர்ந்து, காலியான தொகுதியாக கன்னியாகுமரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாகும். அதன்படி பார்த்தால் வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் இந்த தொகுதிக்கு தேர்தல் நடத்த வேண்டும்.
அதே சமயத்தில் தமிழக சட்டசபைக்கான தேர்தலும் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் தனியாக நடத்தப்படுமா? அல்லது சட்டசபை தேர்தலுடன் இந்த இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்படுமா? என்ற சந்தேகம் அரசியல் கட்சியினர் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் குமரி மாவட்ட வாக்காளர்கள் மத்தியிலும் இருந்து வந்தது.
இந்தநிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு நேற்று முன்தினம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பிப்ரவரி மாதத்துக்குள் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனினும் அந்த சமயத்தில் சூழ்நிலையை பொறுத்தும் முடிவெடுக்கப்படும். தேர்தலுக்கான வி.வி.பேட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்திருந்தார்.
அதற்கேற்ப நெல்லை மாவட்டத்தில் இருந்து 3,640 வாக்குப்பதிவு எந்திரம், 2,900 கட்டுப்பாட்டு எந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் 2900 வி.வி.பேட் எந்திரமும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 930 கட்டுப்பாட்டு எந்திரம், 860 வி.வி.பேட் எந்திரமும், குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த 922 வாக்குப்பதிவு எந்திரம், 726 கட்டுப்பாட்டு எந்திரம், 797 வி.வி.பேட் எந்திரம் என மொத்தம் 4,562 வாக்குப்பதிவு எந்திரம், 4,556 கட்டுப்பாட்டு எந்திரம், 4557 வி.வி.பேட் எந்திரம் ஆகியவை திங்கள்நகரில் உள்ள வேளாண்மை ஒருங்குமுறை விற்பனைக்கூட குடோனுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அவற்றை பெல் என்ஜினீயர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் மூலம் சரிபார்க்கும் பணி கடந்த 15 நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவுடன் இந்த பணி நிறைவு பெற்றது. இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வி.வி.பேட் எந்திரத்தில் பொருத்தப்படும் பேப்பர் ரோல்கள் அடங்கிய பெட்டிகள், மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவியில் பொருத்த பயன்படும் பேட்டரிகள் அடங்கிய பெட்டிகளும் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன.
அவை நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தன. அதில் 215 அட்டை பெட்டிகளில் வி.வி.பேட் கருவியில் பொருத்தக்கூடிய பேப்பர் ரோல்களும், 37 பெட்டிகளில் கட்டுப்பாட்டு கருவிக்கான பேட்டரிகளும் வந்து சேர்ந்தன. அவற்றை தேர்தல் பிரிவு தாசில்தார் சேகர் மற்றும் ஊழியர்கள் சரிபார்த்தனர். பின்னர் அவை கலெக்டர் அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதா? என்பது குறித்து குமரி மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பேரில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு வசதியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம். தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவிட்டாலும் நாங்கள் தேர்தலை நடத்துவதற்கு தயார் நிலையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story