காண்டிராக்டரை கொலை செய்ய தூண்டிய பிரபல ரவுடி கைது


காண்டிராக்டரை கொலை செய்ய தூண்டிய பிரபல ரவுடி கைது
x
தினத்தந்தி 17 Oct 2020 3:38 AM IST (Updated: 17 Oct 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

புதுவை காண்டிராக்டரை கொலை செய்ய தூண்டிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தை அடுத்த தர்மாபுரியை சேர்ந்தவர் ஜீவா என்கிற இருசப்பன்(வயது 42). மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பும் லேபர் காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இவருக்கு கல்பனாதேவி(38) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 14-ந் தேதி மேட்டுப்பாளையம் மின்துறை அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது ஜீவாவை மர்ம கும்பல் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்தது.

இதுகுறித்து மேட்டுப் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், காந்திதிருநல்லூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அய்யப்பன், அவரது கூட்டாளிகளான ரவுடிகள் மாமூல் கேட்டு தர மறுத்த தகராறில் ஜீவா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

ரவுடி கைது

இதுதொடர்பாக அய்யப்பனின் கூட்டாளிகளான ஜீவா, ஜோசப், ஆகாஷ், சசிக்குமார், வாணரப்பேட்டை முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொரோனா பரிசோதனை நடத்தியதில் தொற்று இல்லாதது தெரியவந்ததையடுத்து அவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் ஜீவாவை கொலை செய்ய தூண்டியதாக ரவுடி அய்யப்பனை நேற்று போலீசார் கைது செய்தனர். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு வந்ததும் அவரை சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Next Story