இன்று தசரா திருவிழா தொடங்குகிறது: முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் தயார்


இன்று தசரா திருவிழா தொடங்குகிறது: முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் தயார்
x
தினத்தந்தி 17 Oct 2020 5:30 AM IST (Updated: 17 Oct 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் தயாராக உள்ளது.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்த பெற்ற தசரா திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

காலை 10.45 மணிக்கு கொடிப்பட்டம் புறப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வருகிறது. தொடர்ந்து கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் நாளான வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் நடக்கிறது.

பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இன்று (சனிக்கிழமை) மற்றும் 10, 11-ம் திருவிழா நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 2-ம் திருவிழா முதல் 9-ம் நாள் வரையிலும், விழா நிறைவு நாளிலும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அரசின் வழிகாட்டுதல்படி தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் தயாராக உள்ளது. பக்தர்கள் வரிசையாக செல்லவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கோவில் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவில் வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கவும், கைகழுவும் திரவம் மூலம் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story