அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்


அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 17 Oct 2020 5:38 AM IST (Updated: 17 Oct 2020 5:38 AM IST)
t-max-icont-min-icon

அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஈரோடு,

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை என்றாலே பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். நேற்று புரட்டாசி மாத அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என கோவில் நிர்வாகத்தினர் எதிர்பார்த்தார்கள். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் என்று கருதி நேற்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று காலை 5 மணி முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வர தொடங்கினார்கள். அனைவரும் தடுப்புகள் வழியாக கோவில் நுழைவுவாயில் வரை செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். யாரும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நுழைவுவாயில் முன்பு சூடம் ஏற்றி, அம்மனை வணங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். எனினும் இரவு 8 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

பவானிசாகர்

பவானிசாகரில் மேட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள டணாய்க்கன் கோட்டை சோமேஸ்வரர் கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி காலை முதல் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. மதியம் உச்சி கால பூஜை நடந்தது. மேலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் எரங்காட்டூர் சாஸ்திரி நகர் அருகே உள்ள வேல் முருகன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், புங்காரில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில், கெஞ்சனூரில் உள்ள கரியகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சிவகிரி

சிவகிரி அருகே அம்மன் கோவில் என்ற இடத்தில் உள்ள பொன்காளி அம்மன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், நுழைவுவாயிலேயே தேங்காய் உடைத்து பழம் வைத்து தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பின்னர் கோவிலுக்குள் சென்று சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அந்தியூர்

அந்தியூர் பஸ் நிலையம் அருகே பழமையானதும், பிரசித்திபெற்றதுமான அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் பட்டு ஆடையுடன் மலர் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், ஒலகடம், வெள்ளித்திருப்பூர், பர்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Next Story