ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி


ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி
x
தினத்தந்தி 17 Oct 2020 8:08 AM IST (Updated: 17 Oct 2020 8:08 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறில் வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு மணிமண்டபம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

பொள்ளாச்சி,

பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் கட்டுவதற்கு முயற்சி செய்து, அதற்கு உறுதுணையாக இருந்த வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு முன் ரூ.1 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மணிமண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சாதாரண விவசாயியாக பிறந்து முதல்-அமைச்சராகி எண்ணற்ற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். அவரது தலைமையில் செயல்படும் தமிழக அரசு அதிக வேளாண் விளைச்சலும், வறுமை ஒழிப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை உணர்ந்து வேளாண் நலன் காக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது. வேளாண்மை துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கடந்த 2020-2021-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடரில் ரூ.11 ஆயிரத்து 894 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே வேளாண்மை துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தது தமிழகம் தான்.

சாகுபடி பரப்பினை அதிகரித்தல், விவசாயத்தில் புதிய உத்திகளை கையாளுதல், விதைகள், உரங்கள் ஆகியவை உரிய நேரத்தில் கிடைக்க செய்தல் மற்றும் தேவையான பயிர்கடன் வழங்குதல், பாசன வசதி, மானிய விலையில் எந்திரங்கள் வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதன் மூலம் தமிழகத்தில் 2-ம் பசுமை புரட்சி ஏற்பட்டு வருகின்றது. விவசாய தொழிலில் ஈடுபடும் விவசாயிகள், தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் உழவர் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் பரம்பிக்குளம், ஆழியாறு அணை திட்டத்திற்கு அடித்தளமாக இருந்தவர் வி.கே.பழனிசாமி கவுண்டர். ஆனைமலையின் மேற்கு பகுதியில் ஏராளமான தண்ணீர் யாருக்கும் பயனின்றி கடலில் கலந்தது. அந்த தண்ணீரை திருப்பி கீழே கொண்டு வரும் வகையில் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வி.கே.பழனிசாமி கவுண்டர் மறைந்தாலும், இந்த நீர்பாசன திட்டத்தின் மூலம் அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும். வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் மற்றும் நூலகம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்பட உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நீண்டகாலமாக ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக கேரள முதல்-அமைச்சருடன் சேர்ந்து கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டம், பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்படும். கோதவாடி-காவேரி ஆறுகள் இணைப்பு திட்டமும் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், சப்-கலெக்டர் வைத்திநாதன், பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரங்கநாதன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் அமைச்சர் தாமோதரன், வால்பாறை நகர கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, துணை தலைவர் மயில்கணேசன், ஆனைமலை ஒன்றிய குழு தலைவர் சாந்தி கார்த்திக், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக் அப்புசாமி, சுந்தரம், கோவை தெற்கு மாவட்ட பாசறை செயலாளர் சாந்தலிங்ககுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜயகுமார், மாணவர் அணி மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா, கோட்டூர் நகர துணை செயலாளர் காளிங்கராஜ் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பொள்ளாச்சியை அடுத்த நல்லூரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் ரூ-.2 கோடியே 75 லட்சம் செலவில் திருமண மண்டபம் கட்டுவதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் ரூ.4 கோடியே 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

Next Story