ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சினை: பழைய நடைமுறையில் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் காமராஜ் பேட்டி


ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சினை: பழைய நடைமுறையில் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2020 2:45 AM GMT (Updated: 17 Oct 2020 2:45 AM GMT)

ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சினை காரணமாக பழைய நடைமுறையில் பொருட்களை பொதுமக்கள் பெற்று கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உழைக்கும் பெண்களுக்கு மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு 500 பெண்களுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் மானியத்துடன் கூடிய ஸ்கூட்டரை வழங்கினார்.

விழாவில் கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி கலெக்டர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்க தலைவர்கள் மணிகண்டன், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 4,973 பேருக்கு ரூ.12 கோடியே 43 லட்சம் மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் என்கிற திட்டம் ஒரு அம்சமாகும். தமிழகத்தை பொறுத்தவரை முழுவதுமாக 2 கோடியே 2 லட்சம் பேருக்கு ‘ஸ்மார்ட் கார்டு’கள் வழங்கப்பட்டுள்ளது. ‘ஸ்மார்ட் கார்டு’ அறிமுகம் செய்யப்பட்டபோது பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தன. ஆகையால் பழைய ரேஷன் அட்டையை பயன்படுத்தியும், ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தியும் பொருட்கள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை முதல்-அமைச்சர் வழங்கி இருந்தார்.

தற்போது முழுமையாக ஸ்மார்ட் கார்டு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பெரிய திட்டங்களை செயல்படுத்தும்போது சிறு, சிறு நடைமுறை சிக்கல்கள் இருப்பது வழக்கமான ஒன்று தான். கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் சர்வரில் பொருட்களை பொதுமக்கள் வாங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதனையடுத்து ரேஷன் கடைகளில் பழைய முறையில் ஸ்மார்ட் கார்டு ஸ்கேனிங் முறையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் பழைய நடைமுறையில் பொருட்கள் வழங்கப்படுகிறது.

நடப்பு பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 816 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்கு 3 மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கையிருப்பில் உள்ளன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். நெல் கொள்முதலில் எந்த முறைகேட்டுக்கும் தமிழக அரசு ஒருபோதும் இடமளிக்காது. தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story