மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் பெருஞ்சாணி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு - ஆறுகளில் வெள்ளப்பெருக்கு + "||" + By continuous rain From the dam 3 thousand cubic feet of overflow opening Flooding in rivers

தொடர் மழையால் பெருஞ்சாணி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு - ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தொடர் மழையால் பெருஞ்சாணி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு - ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 3192 கன அடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குமரியின் குற்றாலம் எனப்படும் திற்பரப்பு அருவியில் காட்டாற்று வெள்ளமாக கொட்டுகிறது. நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் மழை குறைந்தது. நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பகலில் மழை இல்லை, வெயிலாக இருந்தது.


நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை - 23, பெருஞ்சாணி- 4.8, சிற்றார் 1- 21.8, சிற்றார் 2-14, புத்தன் அணை- 5.4, மாம்பழத்துறையாறு- 3, முக்கடல்- 7, கன்னிமார்- 12.2, கொட்டாரம்- 3.8, மயிலாடி- 3.6, நாகர்கோவில்- 13.4, சுருளக்கோடு- 13.6, தக்கலை- 4, பாலமோர்- 32.2, கோழிப்போர்விளை- 3, அடையாமடை- 5, முள்ளங்கினாவிளை- 3 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

ஆனால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருக்கிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 3,169 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த பேச்சிப்பாறை அணைக்கு நேற்று 2,883 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 2,474 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த பெருஞ்சாணி அணைக்கு நேற்று 2,308 கனஅடி தண்ணீர் வந்தது.

சிற்றார்-1 அணைக்கு 179 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 75 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. சிற்றார்-2 அணைக்கு 148 கனஅடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 86 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 52 கன அடி தண்ணீரும் வருகிறது. மாம்பழத்துறையாறு அணை நிரம்பியதால் அந்த தண்ணீர் அப்படியே மறுகாலாக திறந்து விடப்படுகிறது. முக்கடல் அணைக்கு 8 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 7.42 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நேற்று முன்தினம் நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42.60 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 1¾ அடி உயர்ந்து 44.30 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 3 நாளில் இந்த அணையில் 5¼ அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 73.80 அடியாக இருந்த பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று 74.25 அடியாக உயர்ந்தது. இந்த அணையில் 3 நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 14.17 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 14.27 அடியாகவும் உயர்ந்துள்ளன.

பொய்கை அணைக்கு நீர்வரத்து இருப்பதால் நேற்று முன்தினம் 12.20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4¼ அடி உயர்ந்து நேற்று 16.50 அடியாக அதிகரித்தது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியாக உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 23.8 அடியாக அதிகரித்துள்ளது. இதனால் முக்கடல் அணை ஓரிரு நாளில் நிரம்பும் தருவாயில் உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், அணைகளின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவை எட்டியதாலும், நிறைநீர் மட்டத்தை எட்ட ஒன்றிரண்டு அடி நீர்மட்டமே தேவையாக இருப்பதாலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று 74¼ அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணையில் நேற்றுமுன்தினம் பிற்பகலில் மறுகால் மதகு வழியாக வினாடிக்கு 1000 கன அடி வீதம் உபரிநீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து 2300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் உபரிநீர் திறப்பின் அளவு அதிகரிக்கப்பட்டது. அதாவது நேற்று வினாடிக்கு 3192 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் பரளியாறு, மூவாற்றுமுகம் ஆறு, குழித்துறை தாமிரபரணியாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையால் கல்குளம் தாலுகா பகுதியில் ஒரு வீடு இடிந்து விழுந்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை