கரூரில் இருந்து குறைவான ஆம்னி பஸ்களே இயக்கம்


கரூரில் இருந்து குறைவான ஆம்னி பஸ்களே இயக்கம்
x
தினத்தந்தி 17 Oct 2020 4:28 AM GMT (Updated: 17 Oct 2020 4:28 AM GMT)

கரூரில் இருந்து நேற்று குறைவான ஆம்னி பஸ்களே இயக்கப்பட்டன.

கரூர்,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ், ரெயில்கள் மற்றும் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மாவட்டத்திற்குள்ளும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவில் இருந்து படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனாலும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று முதல் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இதனைத்தொடர்ந்து நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து தயார் நிலையில் இருந்தன. தொடர்ந்து நேற்று முதல் கரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. கரூரில் இருந்து சென்னை மற்றும் ஓசூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தும் பஸ்சில் ஏறினர். மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகளும் குறைந்த அளவிலேயே இருந்தனர்.

Next Story