சேலத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி சாவில் சந்தேகம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல்


சேலத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி சாவில் சந்தேகம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Oct 2020 4:00 PM IST (Updated: 17 Oct 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார். சாவில் சந்தேகம் எனக்கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் சின்னவீராணம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 22). எலக்ட்ரீசியன். இவர் நேற்று வாய்க்கால்பட்டறை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் வயரிங் வேலை பார்த்து வந்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் திரண்டு வந்து அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் அவர்கள், முத்துகுமாரின் உடல் கருகவில்லை என்பதால் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்ததுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், சாவில் சந்தேகம் இருந்தால் அதுதொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதனிடையே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானது தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story