சாயல்குடியில், தமிழ் பெயர்களுடன் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு


சாயல்குடியில், தமிழ் பெயர்களுடன் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2020 3:30 AM IST (Updated: 17 Oct 2020 10:29 PM IST)
t-max-icont-min-icon

சாயல்குடியில் தமிழ் பெயர்களுடன் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சாயல்குடி,

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த விசாலி, கோகிலா, மனோஜ் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஜமீன்தார் அரண்மனை எதிரில் பழமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் விதானத்தில் 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். புது கோவில் கட்ட மண்டபத்தை பிரித்தபோது கிடைத்த 3 அடி உயரமுள்ள மேலும் ஒரு கல்லில் கல்வெட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டுகளை படி எடுத்து ஆய்வு செய்தபோது இது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:- இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கற்களில் இருந்ததும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய 55 வரிகள் கொண்ட ஒரே கல்வெட்டு ஆகும். நிச்சி நாயகனான மேல் கீரை நாடாள்வான் மாணிக்கன், உய்யவந்தானான குளதை யாதயன் ஆகிய 2 பேரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை சாயல்குடி சொக்கனாதகோவிலுக்கு விற்று அதை சிவன் கோவில்களின் பொறுப்பாளராக கருதப்படும் சண்டேஸ்வரதேவர் பெயருக்கு மாற்றிக் கொடுத்து அதற்கு ஈடாக பணம் பெற்றுள்ளதையும், இதற்கு சாட்சியாக பலர் கையொப்பம் இட்டு உள்ளதையும் இந்த கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

தற்போது நிலம் விற்பனை செய்யும்போது வாங்குபவர் விற்பவர் சாட்சிகள் பத்திரத்தில் கையொப்பம் இடுவதுபோல அக்காலத்தில் ஓலைச்சுவடியில் அவர்களின் கையொப்பம் பெற்று அதை கல்வெட்டில் வெட்டி வைப்பார்கள். கையொப்பமிட தெரியாதவர்களை தற்குறி எனவும், அவர்களுக்கு மற்றவர்கள் சான்று விடுதலை தற்குறி, மாட்டெறிதல் எனவும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் தற்குறி யானமூவருக்கு பிள்ளையார் அழகிய விடங்கர் கோவிலில் இருக்கும் முத்தன் சிவலங்கனான இமையே தருவான், சாத்தனிரட்டை யான், அஞ்சாத காட தட்டான், தச்சன் சீராமன், மூவானான இளமை ஆசாரியன் ஆகியோர் சான்று இட்டுள்ளனர்.

மேலும் கூத்தன் சோழன், வீரபாண்டியராயன், மங்கல வனப்பனாலன் கங்காராயன், சிறந்தான்தொண்டையன், பேரருங்கோ வேளான் உடையான் பாலன், வதுலங்கன் கெங்கையான் விரதமிட்டராயன் ஆகியோரும் இதில் கையொப்பமிட்டு உள்ளனர். இந்த கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ள அனைவரின் பெயர்களும் அழகிய தமிழ் பெயர்களாக உள்ளன. இதன் மூலம் 800 ஆண்டுகளுக்குமுன் தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கத்தை அறிந்துகொள்ள முடிகிறது. கல்வெட்டின் சில பகுதிகள் அழிந்துவிட்டதால் கோவிலுக்கு விற்கப்பட்ட

நிலம் பற்றி முழுமையாக அறிய இயலவில்லை அதன் எல்லைகளாக இரு பெரு வழிகள் மூலம் சிறு குளம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இதில் சொல்லப்படும் பெருவழிகள், நெடுஞ்சாலைகள், பெரியபட்டினம், கன்னியாகுமரி செல்லும் பெருவழிகள் ஆக இருக்கலாம். போளம் என்பது பிசின் போன்ற நறுமண பண்டங்கள் ஆகும். வணிகர்களின் விற்பனை பண்டமாக போளம் வைக்கப்பட்டிருந்த இடமும் கல்வெட்டில் ஒரு எல்லையாக கூறப்பட்டுள்ளது.

சாயல்குடி இரு வணிக பெருவழிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்த ஒரு முக்கிய வணிக நகரமாக பழங்காலம் முதல் இருந்திருப்பதை இந்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.கல்வெட்டு உள்ள இடம் தற்போது அங்காள ஈஸ்வரி கோவில் என அழைக்கப்பட்டாலும் கல்வெட்டில் பிடாரி கோவில் என கூறிப்பிடப்பட்டு உள்ளது. சாயல்குடி சிவன் கோவிலில் உள்ள கி.பி. 10-ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டில் இந்த ஊர் உலகு சிந்தாமணி வளநாட்டு சாகியில்குடி என குறிப்பிடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story