குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலையில் அர்ச்சகர் கொடிப்பட்டத்தை ஏந்தியவாறு கோவிலைச் சுற்றி வலம் வந்தார். தொடர்ந்து காலை 10.45 மணிக்கு கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், சாமி தரிசனம் செய்தார்.
2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 9-ம் திருநாளான வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அரசின் வழிகாட்டுதல்படி தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் 6 ஆயிரம் பேரும், நேரடியாக கோவிலுக்கு வரும் 2 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் நடைபெறுகிறது. அன்றைய தினமும், மறுநாளும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
Related Tags :
Next Story