மழையால் பாதிக்கப்பட்ட வடகர்நாடக மாவட்டங்களில் நிவாரண பணிகளை கர்நாடக அரசு திறம்பட நிர்வகித்து வருகிறது - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு


மழையால் பாதிக்கப்பட்ட வடகர்நாடக மாவட்டங்களில் நிவாரண பணிகளை கர்நாடக அரசு திறம்பட நிர்வகித்து வருகிறது - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 17 Oct 2020 10:30 PM GMT (Updated: 17 Oct 2020 9:38 PM GMT)

மழையால் பாதிக்கப்பட்ட வடகர்நாடக மாவட்டங்களில் நிவாரண பணிகளை கர்நாடக அரசு திறம்பட நிர்வகித்து வருவதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

மைசூரு,

உலக பிரசித்திபெற்ற மைசூரு தசரா விழா நேற்று மைசூரு சாமுண்டி மலையில் தொடங்கியது. சாமுண்டீஸ்வரி கோவில் வளாகத்தில் வெள்ளத்தேரில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்களை தூவியும், குத்துவிளக்கை ஏற்றி வைத்தும் கொரோனா போராளியான டாக்டர் மஞ்சுநாத் தசரா விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பாவும் கலந்து கொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்களை தூவி, குத்து விளக்கை ஏற்றினார். அதையடுத்து முதல்-மந்திரி எடியூரப்பா, 6 கொரோனா போராளிகளுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார். பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஏராளமான மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகர்நாடக மாவட்டங்களான கலபுரகி, பீதர், யாதகிரி, பல்லாரி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, கொப்பல், விஜயாப்புரா, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண பணிகளையும் கர்நாடக அரசு திறம்பட செய்து வருகிறது. அதற்கு தேவையான நிதியும் வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடகர்நாடக மக்கள் பயப்படவும், ஆதங்கப்படவும் வேண்டாம். அவர்களுக்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும்.

நேற்று(அதாவது நேற்று முன்தினம்) இரவு பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களின் நிலை குறித்தும், அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நிவாரண பணிகள் குறித்தும் என்னிடம் கேட்டறிந்தார்.

மேலும் மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படும் என்றும் என்னிடம் உறுதி அளித்தார். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்களிடமும், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கிடமும் நான் தினமும் இதுபற்றி பேசி வருகிறேன். மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உடைமைகள், வாழ்வாதாரம் போன்றவற்றை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அடுத்த ஒரு வாரத்தில் நிவாரண நிதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரண நிதியை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பயிர்கள் பாதிக்கப்பட்ட 51 ஆயிரத்து 810 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக ரூ.36.17 கோடி நிவாரண நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி ஆகும்.

கடந்த 16-ந் தேதி மாநில அரசு வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.85.50 கோடியை ஒதுக்கியது. அதன்மூலம் நிவாரண பணிகளுக்கான உபகரணங்கள், பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளலாம். மேலும் நிவாரண பணிகளுக்கு தேவையான ஏராளமான பொருட்கள் மற்றும் உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கலபுரகி, பீதர், யாதகிரி, பல்லாரி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, தாவணகெரே, கொப்பல், தட்சிண கன்னடா, சிவமொக்கா, உடுப்பி, விஜயாப்புரா, பெலகாவி ஆகிய மாவட்டங்கள் மழையால் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கர்நாடகத்தில் தற்போது கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் மாநிலத்தில் மழையால் ரூ.9,952 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் 10.7 லட்சம் ஹெக்டேர் அளவில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த இழப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் தொடர் கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்துள்ள மழையால் இதுவரை ரூ.4,851 கோடிக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும், நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிவாரண பணிகளை மேற்கொள்வதில் அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story