மைசூரு அரண்மனையில் இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார்
மைசூரு அரண்மனையில் இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார்.
மைசூரு,
உலக புகழ்பெற்ற மைசூரு விழா நேற்று தொடங்கியது. சாமுண்டி மலையில் முதல்-மந்திரி எடியூரப்பா முன்னிலையில் டாக்டர் மஞ்சுநாத், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்வதன் மூலமாக தசரா விழா தொடங்கியது. அதேநேரத்தில் நேற்று அதிகாலை மைசூரு அரண்மனையில் தசரா விழாவும், நவராத்திரி நிகழ்ச்சிகளும் தொடங்கின. மன்னர் பரம்பரையை சேர்ந்த ராகுகுரு முன்னிலையில் பாரம்பரிய பூஜைகள் தொடங்கின.
அதிகாலை 5 மணி அளவில் இளவரசர் யதுவீருக்கு எண்ணெய், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவை தடவி அரண்மனை குடும்பத்தினர் குளிப்பாட்டினர். பின்னர் இளவரசர் யதுவீருக்கு காப்பு கட்டி, கணபதி ஹோமம், சண்டி யாகம், சாமுண்டீஸ்வரி பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அரண்மனையில் இருக்கும் அனைத்து கோவில்களுக்கும் யதுவீர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
இதையடுத்து இளவரசர் யதுவீர், அரண்மனை வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பட்டத்து யானை, குதிரை, ஒட்டகம் ஆகியவற்றுக்கும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் காலை 8.15 முதல் 10.15 வரை சுபமுகூர்த்த நேரத்தில் தர்பார் அறைக்கு வந்து நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்துக்கு ராஜகுரு அறிவுரையின்படி மன்னர் பரம்பரையின் விதிமுறைகளை அனுசரித்து யதுவீர் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் காலை 10.30 மணிக்கு இளவரசர் யதுவீர், பாரம்பரிய மன்னர் உடை அணிந்து சிம்மாசனத்தில் ஏறி நின்று நாட்டுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி செலுத்தினார். பின்னர் அவர் சிம்மாசனத்தில் அமர்ந்து சுமார் அரை மணி நேரத் தனியார் தர்பார் நடத்தினார்.
தர்பார் நிகழ்ச்சியில் மன்னர் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் அரண்மனைக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
மைசூரு தசரா விழாவையொட்டி நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மைசூரு தசரா விழாவுக்கு மாநில அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதில், ரூ.4 கோடி மின்விளக்கு அலங்காரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மைசூரு நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது.
Related Tags :
Next Story