தென்காசி அருகே, 16 வயது சிறுமி கற்பழிப்பு; ஆட்டோ டிரைவர் கைது - கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் உள்பட 3 பேர் சிக்கினர்


தென்காசி அருகே, 16 வயது சிறுமி கற்பழிப்பு; ஆட்டோ டிரைவர் கைது - கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் உள்பட 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 18 Oct 2020 3:15 AM IST (Updated: 18 Oct 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே 16 வயது சிறுமியை கற்பழித்ததாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும், கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் உள்பட 3 பேர் சிக்கினர்.

தென்காசி, 

தென்காசி அருகே உள்ள புளிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 26). ஆட்டோ டிரைவரான இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பேசி பழகி உள்ளார். மேலும், ஆசை வார்த்தை கூறி கடந்த மார்ச் மாதம் கட்டாயப் படுத்தி அந்த சிறுமியை கற்பழித்ததாக கூறப் படுகிறது. இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் சுப்புராஜ் தெரிவித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இதுகுறித்து அவள் தனது தாயிடம் கூறினாள். உடனே அவர் சுப்புராஜின் பெற்றோரான சுந்தர்ராஜ் (56), மாரியம்மாள் (49) ஆகியோரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்கள் கருவை கலைத்து விடு என்றும், ரூ.2 லட்சம் தருகிறோம் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கீழப்பாவூர் யூனியன் சமூக நலத்துறை அதிகாரி பாக்கியத்தாய், தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரஸ்வதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுப்புராஜை கைது செய்தார். மேலும், கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்ததாக சுந்தர்ராஜ், மாரியம்மாள் மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். கைதான சுப்புராஜ் கடந்த மே மாதம் இன்னொரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியை கற்பழித்த ஆட்டோ டிரைவர் மற்றும் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story