திருவட்டார் அருகே வாட்ஸ்-அப் மூலம் உருவான நட்பால் நகையை பறிகொடுத்த பெண் அக்காள்-தங்கை தலைமறைவு


திருவட்டார் அருகே வாட்ஸ்-அப் மூலம் உருவான நட்பால் நகையை பறிகொடுத்த பெண் அக்காள்-தங்கை தலைமறைவு
x
தினத்தந்தி 18 Oct 2020 4:43 AM GMT (Updated: 18 Oct 2020 4:43 AM GMT)

திருவட்டார் அருகே வாட்ஸ் அப் மூலம் உருவான நட்பால் நகையை பெண் ஒருவர் பறிகொடுத்தார். இதுதொடர்பாக அக்காள்-தங்கையை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவட்டார்,

திருவட்டார் அருகே வேர்கிளம்பி உடையார்விளையை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவி சுபிதா (வயது 29). இவருக்கு குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி, ஜெயராணி ஆகியோருடன் வாட்ஸ்-அப் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அக்காள்-தங்கை.

கடந்த ஓராண்டாக சுபிதாவும், அக்காள், தங்கையும் நெருங்கி பழகி தோழியாகி விட்டனர். இந்தநிலையில் சம்பவத்தன்று சுபிதா வீட்டுக்கு அவர்கள் இருவரும் சென்று அன்றைய தினம் இரவு தங்கி உள்ளனர். மறுநாள் காலையில் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதனை தொடர்ந்து சுபிதா, தனது வீட்டு பீரோவை பார்த்துள்ளார். அங்கு வைக்கப்பட்டிருந்த 2¾ பவுன் நகையை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வீட்டுக்கு வந்து சென்ற ஜெயலெட்சுமியை, செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் அவருடைய செல்போன் ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர்களை தேடி வீட்டுக்கு சென்றார். அங்கும் அவர்கள் இல்லை. ஆகவே, தனது நகையை அவர்கள் தான் திருடி சென்றிருக்க வேண்டும் என்று கருதி ஜெயலெட்சுமி, ஜெயராணி ஆகிய 2 பேர் மீது திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அக்காள்-தங்கை இருவரையும் தேடி வருகின்றனர். வாட்ஸ்-அப் மூலம் உருவான நட்பால் பெண் ஒருவர் நகையை பறிகொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story