திருப்பூருக்கு 22-ந் தேதி வருகை: புதிய திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்


திருப்பூருக்கு 22-ந் தேதி வருகை: புதிய திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2020 10:44 AM IST (Updated: 18 Oct 2020 10:44 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூருக்கு வருகிற 22-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந் தேதி திருப்பூருக்கு வருகை தந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு பணியை மேற்கொள்ள உள்ளார். இதைத்தொடர்ந்து முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஆய்வுக்கூட்டம் நிறைவடைந்ததும் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளார். அந்த திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி வருகிற 22-ந் தேதி திருப்பூர் வருகிறார். மதியம் 2.30 மணிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். முதல்-அமைச்சர் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கருத்து கேட்கிறார். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளோம். கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்து திருப்பூரில் தான் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்கிறார்.

மேலும் திருப்பூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரை சந்தித்து கலந்துரையாடுகிறார். மகளிர் சுய உதவி குழுவினரை சந்திக்கிறார்.

முதல்-அமைச்சர் திருப்பூர் வருவது மிகப்பெரிய கவுரவம் ஆகும். திருப்பூருக்கு முதல்-அமைச்சர் ஒவ்வொரு முறை வரும்போதும் மிகப்பெரிய திட்டங்களை கொடுத்து வருகிறார். 4-வது புதிய குடிநீர் திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். அந்தப் பணிகள் விரைந்து நடந்து வருகிறது. அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்று ஆய்வு செய்து அந்த பணிகளையும் அவர் முடுக்கி விட்டுள்ளார். இதற்காக விவசாயிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்கள் சார்பாக முதல்-அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருப்பூருக்கு வரும் முதல்- அமைச்சருக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும். பயனாளிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அனுமதிக்கப்படுவார்கள். திருப்பூர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி கொடுத்தார். ஒரு வருடத்தில் 3 கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மையத்தை வழங்கி சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டிலேயே 120 மாணவர்கள் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் படிப்பதற்கு வழிவகை செய்து கொடுத்துள்ளார். உடுமலை பண்ணை கிணறு பகுதியில் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்து அதற்கும் அடிக்கல் நாட்ட இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக காங்கேயம் திட்டுபாறை சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது நிறுத்தாமல் சென்ற லாரியை மடக்கி பிடிக்க முயன்றபோது லாரியில் அடிப்பட்டு இரண்டாம் நிலை காவலர் பிரபு (வயது 25) இறந்தார். பிரபுவின் குடும்பத்திற்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை பிரபுவின் குடும்பத்தினருக்கு அமைச்சர் வழங்கினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன், தனியரசு, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story