மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: இறந்தவரின் உடலுடன் கிராம மக்கள் போராட்டம்


மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: இறந்தவரின் உடலுடன் கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2020 5:38 AM GMT (Updated: 18 Oct 2020 5:38 AM GMT)

பாப்பாரப்பட்டி அருகே மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் இறந்தவர் உடலுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேப்பிலைஅள்ளி கிராமத்தில் இறந்தவர்களை புதைக்கும் மயானம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்து வந்தனர். இதனிடையே வேப்பிலைஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவர் நேற்று உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு கிராம மக்கள் மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது பாதை கம்பி வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அறிந்த கிராம மக்கள் வேலியை அகற்றி சுடுகாட்டுக்கு பாதை விட வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் வலியுறுத்தினர். கம்பி வேலியை அகற்றாததால் கிராமமக்கள் இறந்தவரின் உடலை இறக்கி வைத்து பாப்பாரப்பட்டி- வேப்பிலைஅள்ளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பாரப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது என்று கிராம மக்களிடம் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பாதையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கம்பி வேலி அகற்றப்பட்டது. தொடர்ந்து இறந்தவருடைய உடலை கிராம மக்கள் எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர். இறந்தவரின் உடலுடன் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story